சீன பார்முலா 1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம்
|5 சுற்று முடிவில் வெர்ஸ்டப்பென் 110 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஷாங்காய்,
பார்முலா 1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 5-வது சுற்றான சீன கிராண்ட்பிரி அங்குள்ள ஷாங்காய் நகரில் நேற்று நடந்தது. இதில் 305.066 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரை அதிவேகமாக செலுத்தினர். முதல் வரிசையில் இருந்து கிளம்பிய நடப்பு சாம்பியன் நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 40 நிமிடம் 52.554 வினாடிகளில் முதலாவதாக வந்து 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். இந்த சீசனில் அவரது 4-வது வெற்றி இதுவாகும்.
அவரை விட 13.773 வினாடி மட்டுமே பின்தங்கிய இங்கிலாந்து வீரர் லான்டோ நோரிஸ் (மெக்லரன் அணி) 2-வது இடத்தை பிடித்து அதற்குரிய 18 புள்ளிகளை வசப்படுத்தினார். செர்ஜியோ பெரெஸ் (மெக்சிகோ) 3-வது இடத்தை பெற்றார். 7 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இதுவரை நடந்துள்ள 5 சுற்று முடிவில் வெர்ஸ்டப்பென் 110 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இதன் 6-வது சுற்று போட்டி அமெரிக்காவில் அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி நடக்கிறது.