சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: சாத்விக்- சிராக் ஜோடி போராடி தோல்வி
|இந்த சீசனில் 6 இறுதிப்போட்டியில் ஆடியுள்ள சாத்விக்- சிராக் ஜோடி சந்தித்த முதல் தோல்வி இதுதான்.
ஷின்சென்,
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷின்சென் நகரில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி கூட்டணி, 'நம்பர் ஒன்' ஜோடியான சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் இணையை எதிர்கொண்டது.
அனல் பறந்த போட்டியின் முதல் செட்டை சீன ஜோடியும், 2-வது செட்டை இந்திய இணையும் கைப்பற்றியது. 3-வது செட்டில் தொடக்கத்தில் லியாங்- வாங் கூட்டணியின் கை ஓங்கியது. ஒரு கட்டத்தில் 20-13 என்ற கணக்கில் வெற்றியின் விளிம்புக்கு வந்தனர். அதன் பிறகு சரிவில் இருந்து ஆக்ரோஷமாக எழுச்சி பெற்ற சாத்விக்- சிராக் தொடர்ச்சியாக 6 புள்ளிகளை சேகரித்து 19-20 வரை நெருங்கி வந்தனர்.
இதனால் எதிர் ஜோடி பதற்றத்திற்குள்ளான நிலையில் சமன் செய்வதற்கு வாய்ப்புக்குரிய புள்ளியில் பந்தை இந்திய வீரர்கள் வலையில் அடித்து வெற்றியை கோட்டை விட்டனர். 1 மணி 11 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் சாத்விக்- சிராக் ஷெட்டி ஜோடி 19-21, 21-18, 19-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவியது. இந்த சீசனில் 6 இறுதிப்போட்டியில் ஆடியுள்ள சாத்விக்- சிராக் அதில் சந்தித்த முதல் தோல்வி இதுதான்.