முதலமைச்சர் கோப்பை 2023 - மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் போட்டிகள் நாளை தொடக்கம்
|மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் போட்டிகள் நாளை தொடங்கி 11ந்தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை,
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதலமைச்சர் கோப்பை- 2023 மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சென்னையின் 17 இடங்களில் 1ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற 38 மாவட்டங்களை சேர்ந்த 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டிகள் வரும் 25ந்தேதி நிறைவுபெறுகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் போட்டிகள் நாளை தொடங்கி 11ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் மண்டல அளவில் வெற்றிபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் அணிகள் பங்கேற்க உள்ளனர். பள்ளி மாணவ- மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும், கல்லூரி மாணவ- மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் விளையாடுகின்றன.
இந்த போட்டியை காண அனைவருக்கும் அனுமதி இலவசம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.