செஸ் உலகக்கோப்பை; 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
|2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சென்னை,
'பிடே' உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர்.
இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. அதே போல் 2-வது சுற்று ஒன்றரை மணி நேரத்தில் 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று நடைபெற்ற டை-பிரேக்கர் ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சென் வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்
இந்த நிலையில் 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்குவில் நடைபெற்ற உலகக்கோப்பை சதுரங்க வாகையர் போட்டியில், சென்னையை சேர்ந்த இந்தியாவின் இளம் வீரர் பிரக்யானந்தா, உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள நார்வே நாட்டின் மேக்னஸ் கால்சனிடம் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
உலகின் முன்னணி வீரரிடம் 2.5-1.5 என்ற கணக்கில் போராடி அவர் பெற்ற தோல்வி வெற்றிக்கு இணையானதுதான். அவருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த உலகக் கோப்பை போட்டியில் வாகையர் பட்டத்தை வெல்ல வாழ்த்துகள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.