செஸ் ஒலிம்பியாட் தொடர்: தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற அணிகளின் விவரம்
|ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு செஸ் ஒலிம்பியாட் கோப்பை வழங்கப்பட்டது.
சென்னை,
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்ச்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும், சர்வதேச செஸ் வீரர்கள், ரசிகர்களும் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். நிறைவு விழா நடைபெற்ற மேடையின் திரையில் ராஜாஜி முதல் ஜெயலலிதா வரை முன்னாள் முதல்-அமைச்சர்களை கவுரப்படுத்தும் வகையில் அவர்களின் புகைப்படங்கள் திரையிடப்பட்டன.
தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட்டிற்கு பின் விளையாட்டுத்துறை முன்பை விட அதிக பாய்ச்சலுடன் செல்லும். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர், ஆசிய பீச் வாலிபால் தொடர் ஆகியவற்றை சென்னையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது. வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து பாராட்டி வருகின்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று அவர் கூறினார்.
இதனையடுத்து ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கப்பதக்கம் வழங்கினார். தொடர்ந்து அர்மேனியா நாட்டுக்கு வெள்ளிப்பதக்கமும், இந்திய அணிக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது.
இதன்படி ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணியின் நோடிர்பெக் யாகுபோவ், ஜாவோகிர் சிந்தாரோவ், ஷம்சிடின் வோகிடோவ் மற்றும் ஜஹோங்கிர் வாகிடோவ் ஆகியோர் தங்கம் வென்றனர். ஆர்மீனியா அணியின் சர்கிசியன் கேப்ரியல், மெல்குமியன் ஹ்ரான்ட், பெட்ரோசியன் மானுவல் மற்றும் ஹோவன்னிசியன் ராபர்ட் ஆகியோர் வெள்ளி வென்றனர்.
இந்திய 'பி' அணியின் குகேஷ், சரின் நிகல், பிரக்ஞானந்தா மற்றும் சத்வானி ரவுனக் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
மகளிர் பிரிவு
மகளிர் பிரிவில் உக்ரைன் அணியின் முசிச்சுக் மரியா, முசிச்சுக் அன்னா, உஷெனினா அன்னா மற்றும் புக்ஸா நடாலியா ஆகியோர் தங்கம் வென்றனர். ஜார்ஜியாவின் டிசக்னிட்ஸ் நானா, பாட்சியாஷ்விலி நினோ, ஜவகிஷ்விலி லேலா, அரபிட்ஸே மேரி ஆகியோர் வெள்ளி வென்றனர்.
இந்திய மகளிர் 'ஏ' அணியின் கோனேரு ஹம்பி, வைஷாலி, தானியா சச்தேவ் மற்றும் குல்கர்னி பக்தி ஆகியோர் வெண்கலம் வென்றனர். செஸ் ஒலிம்பியாட் தொடரில் தனி நபர் பிரிவில் குகேஷ், நிகால் சரின் ஆகியோருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் தனிநபர் போர்டு பிரிவில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.
பின்னர் செஸ் ஒலிம்பியாட் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் FIDE கொடி இறக்கப்பட்டு, அடுத்து 45-வது செஸ் ஒலிம்பியாட் நடக்க உள்ள ஹங்கேரி நாட்டிடம் செஸ் கொடி வழங்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், ஜோதி அணைக்கப்பட்டது.