செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஆண்கள் அணி 8-வது வெற்றி
|நேற்று நடந்த 8-வது சுற்று ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி ஈரானுடன் மோதியது.
புடாபெஸ்ட்,
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் தொடரில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த 8-வது சுற்று ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி, ஈரானுடன் மோதியது.
இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய இந்திய வீரர் குகேஷ் 34-வது காய் நகர்த்தலில் பர்ஹாம் மக்சூட்லூயை தோற்கடித்தார். மற்ற இந்திய வீரர்கள் அர்ஜூன் எரிகாசி, விதித் குஜராத்தி ஆகியோரும் வெற்றி பெற்றனர். பிரக்ஞானந்தா - ஈரான் வீரர் பர்டியா தனேஷ்வர் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. முடிவில் இந்திய அணி 3.5 - 0.5 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி 8-வது வெற்றியை பெற்றது.
இதுவரை தோல்வியை காணாமல், இந்திய ஆண்கள் அணி 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் நீடிப்பதுடன் சாம்பியன் பட்டத்தையும் நெருங்கியுள்ளது.
பெண்கள் பிரிவில் நேற்று நடந்த 8-வது சுற்றில் இந்திய அணி, போலந்தை எதிர்கொண்டது. இதில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், போலந்தின் அலெக்சாண்ட்ராவை தோற்கடித்தார். தமிழகத்தின் வைஷாலி 41-வது காய் நகர்த்தலில் மோனிகா சோக்கோவிடம் தோல்வியை தழுவினார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹரிகாவும் தோல்வியடைந்தார்.
வந்திகா அகர்வால் - அலிஜா ஸ்லிவிக்கா இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. முடிவில் இந்திய பெண்கள் அணி 1.5 - 2.5 என்ற கணக்கில் போலந்திடம் தோல்வியடைந்தது.