< Back
பிற விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட்: ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணிக்கு தங்கப்பதக்கம்
பிற விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணிக்கு தங்கப்பதக்கம்

தினத்தந்தி
|
9 Aug 2022 10:28 PM IST

ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு செஸ் ஒலிம்பியாட் கோப்பை வழங்கப்பட்டது.

சென்னை,

44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையட்டு அரங்கில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள் பிரம்மிப்பூட்டும் வகையில் இருந்தன.

மாமல்லபுரத்தில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் அகார்டி டிவோர்கோவிச், அந்த அமைப்பின் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், மற்றும் விளையாட்டுத்துறை ஆர்வலர்கள், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், என பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவின் தொடக்கத்தில் நடைபெற்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா உள்ளிட்டோர் கலந்துகொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் குரல் பின்னணியில் எதிரொலிக்க தமிழ் மண் என்கிற பெயரில் தமிழரின் வரலாற்று பெருமைகளை சித்தரித்து நடைபெற்ற கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

தமிழ் மண் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பப்பட்டது. வீரப்பாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரபோராட்ட வீரர்களின் பெருமைகளை போற்றும் வகையில் கமல்ஹாசன் குரல் பின்னணியில் எதிரொலிக்க அதற்கேற்ப கலைஞர்கள் நடித்துக்காட்டியும், நடனமாடியும் பார்வையாளர்களை பரவப்படுத்தினர். டிரம்ஸ் இசையில் உலகப் புகழ்பெற்ற சிவமணி, வீணை இசையில் முத்திரை பதித்த ராஜேஸ் வைத்தியா, மற்றும் கிட்டார் இசையில் ஜாம்பவானாக திகழும் ஸ்டீபன், புல்லாங்குழல் இசையில் புகழ் பெற்று திகழும் நவீன் ஆகியோர் இணைந்து வழங்கிய பியூசன் இசை நிகழ்ச்சியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்ச்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும், சர்வதேச செஸ் வீரர்கள், ரசிகர்களும் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். நிறைவு விழா நடைபெற்ற மேடையின் திரையில் ராஜாஜி முதல் ஜெயலலிதா வரை முன்னாள் முதலமைச்சர்களை கவுரப்படுத்தும் வகையில் அவர்களின் புகைப்படங்கள் திரையிடப்பட்டன.

தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட்டிற்கு பின் விளையாட்டுத்துறை முன்பை விட அதிக பாய்ச்சலுடன் செல்லும். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர், ஆசிய பீச் வாலிபால் தொடர் ஆகியவற்றை சென்னையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. சென்னையை மறந்துவிட வேண்டாம்; உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன். அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது. வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து பாராட்டி வருகின்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று அவர் கூறினார்.

இந்நிலையில் ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கப்பதக்கம் வழங்கினார். தொடர்ந்து அர்மேனியா நாட்டுக்கு வெள்ளிப்பதக்கமும், இந்திய அணிக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது.

பின்னர் செஸ் ஒலிம்பியாட் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் FIDE கொடி இறக்கப்பட்டது. அடுத்து 45-வது செஸ் ஒலிம்பியாட் நடக்க உள்ள ஹங்கேரி நாட்டிடம் செஸ் கொடி வழங்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், ஜோதி அணைக்கப்பட்டது

மேலும் செய்திகள்