< Back
பிற விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட் போட்டி: உஸ்பெகிஸ்தான், உக்ரைன் அணிக்கு  தங்கம்... இந்திய ஆண்கள், பெண்கள் அணிக்கு வெண்கலப்பதக்கம்
பிற விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டி: உஸ்பெகிஸ்தான், உக்ரைன் அணிக்கு தங்கம்... இந்திய ஆண்கள், பெண்கள் அணிக்கு வெண்கலப்பதக்கம்

தினத்தந்தி
|
10 Aug 2022 5:27 AM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் இந்தியா 2-வது அணியும், பெண்கள் பிரிவில் இந்தியா 1-வது அணியும் வெண்கலப்பதக்கம் வென்றன. உஸ்பெகிஸ்தான், உக்ரைன் அணிகள் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

சென்னை,

செஸ் ஒலிம்பியாட்

186 நாடுகள் பங்கேற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியின் ஓபன் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டன. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் இரு பிரிவிலும் இந்தியா சார்பில் தலா 3 அணிகள் களம் இறங்கின.

இந்த செஸ் ஒலிம்பியாட் திருவிழாவின் கடைசி நாளான நேற்று 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டங்கள் அரங்கேறியது. இதில் ஓபன் பிரிவில் இந்தியா 2-வது அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனியை தோற்கடித்தது. இந்திய வீரர்கள் நிஹல் சரின் 55-வது காய் நகர்த்தலில் புளுபாம் மத்யாசையும், சத்வானி ரானக் 47-வது காய் நகர்த்தலில் நிசிபினு லிவிடியெட்டரையும் வீழ்த்தினர். மற்ற இந்திய வீரர்களான பிரக்ஞானந்தா 49-வது காய் நகர்த்தலில் ஸ்வானே ரஸ்முஸ்சுடனும், டி.குகேஷ் 75-வது காய் நகர்த்தலுக்கு பிறகு கெய்மர் வின்சென்டுடனும் 'டிரா'வுக்கு ஒப்புக் கொண்டனர்.

இந்தியா1-வது அணி-அமெரிக்கா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்திய அணியில் அர்ஜூன் எரிகாசி வெற்றியும், நாராயணன் தோல்வியும் கண்டனர். விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா தங்கள் ஆட்டங்களில் 'டிரா' செய்தனர். சமனில் முடிந்ததால் இந்தியா 1-வது அணியின் பதக்க கனவு கலைந்தது.

இதே போல் இந்தியா 3-வது அணி 2-2 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானுடன் டிரா கண்டது. இந்திய அணியில் முரளி கார்த்திகேயன் வெற்றியை தனதாக்கினார். சூர்ய சேகர் கங்குலி தோல்வியை தழுவினார். மற்ற இந்திய வீரர்களான சேதுராமன், அபிமன்யு புரானிக் தங்கள் ஆட்டங்களை 'டிரா'வில் முடித்தனர்.

உஸ்பெகிஸ்தான் 'சாம்பியன்'

புள்ளிபட்டியலில் முன்னிலை வகித்த உஸ்பெகிஸ்தான் அணி தனது கடைசி சுற்றில் 2½-1½ என்ற புள்ளி கணக்கில் நெதர்லாந்தை அடக்கி 8-வது வெற்றியை பதிவு செய்தது. உஸ்பெகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் 'டிரா' செய்த நிலையில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய வாஹிடோவ் ஜகோன்ஜிர் 60-வது காய் நகர்த்தலில் நெதர்லாந்தின் வார்மெர்டாம் மேக்சை வீழ்த்தி தங்கள் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். அர்மேனியா அணி தன்னை எதிர்த்த ஸ்பெயினை 2½-1½ என்ற புள்ளி கணக்கில் பதம் பார்த்து 9-வது வெற்றியை ருசித்தது.

இறுதி சுற்று முடிவில் ஓபன் பிரிவில் தோல்வியை சந்திக்காத உஸ்பெகிஸ்தான் அணி (8 வெற்றி, 3 டிரா) 19 புள்ளிகளும், அர்மேனியா அணி (9 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 19 புள்ளிகளும் எடுத்து சமநிலை வகித்தன. இதையடுத்து டைபிரேக்கர் புள்ளி அடிப்படையில் முன்னிலை பெற்ற உஸ்பெகிஸ்தான் அணி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தது. இளம் வீரர்கள் கொண்ட உஸ்பெகிஸ்தான் அணிக்கு போட்டி தரநிலையில் 13-வது இடம் வழங்கப்பட்டு இருந்தது. பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாத நிலையில் களம் கண்ட இளம் படையினர் வாகை சூடி வரலாற்று படைத்து விட்டனர். அர்மேனியா அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்தியா 2-வது அணி (8 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி) 18 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கத்தை பெற்றது.

இந்திய பெண்கள் அணி அதிர்ச்சி தோல்வி

பெண்கள் பிரிவில் கடைசி சுற்றில் வெற்றி பெற்றால் தங்கப்பதக்கத்தை வெல்லலாம் என்ற பலத்த நெருக்கடிக்கு மத்தியில் ஆடிய இந்தியா 1-வது அணி 1-3 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்திய வீராங்கனை வைஷாலி-குருஷ் இரினா (அமெரிக்கா) இடையிலான ஆட்டம் 44-வது காய் நகர்த்தலிலும், கோனேரு ஹம்பி-தோஹிர்ஜோனோவா இடையிலான ஆட்டம் 40-வது காய் நகர்த்தலிலும் 'டிரா'வில் முடிந்தது. மற்ற இந்திய வீராங்கனைகள் தானியா சச்தேவ் 46-வது காய் நகர்த்தலில் யிப் கரிசாவிடமும், பாக்தி குல்கர்னி 48-வது காய் நகர்த்தலில் ஆப்ரகாம்யன் தாதேவிடமும் வீழ்ந்தனர்.

இந்தியா 2-வது அணி-சுலோவக்கியா இடையிலான மோதல் 2-2 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்திய அணியில் திவ்யா தேஷ்முக் வெற்றியும், பத்மினி ரவுத் தோல்வியும் கண்டனர். வந்திகா அக்ரவால், மேரி ஆன் கோம்ஸ் தங்கள் ஆட்டங்களில் டிரா செய்தனர்.

இந்தியா 3-வது அணி 1½ -2½ என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானிடம் பணிந்தது. இந்திய அணியில் ஈஷா கரவாடே, நந்திதா தோல்வியும், பிரதியுஷா போட்டா வெற்றியும் கண்டனர். சாஹிதி வர்ஷினி தனது ஆட்டத்தை 'டிரா' செய்தார்.

உக்ரைன் அணிக்கு தங்கம்

தோல்வி பக்கமே செல்லாமல் வீறுநடை போட்ட உக்ரைன் அணி கடைசி சுற்றில் 3-1 என்ற புள்ளி கணக்கில் போலந்தை பந்தாடி 7-வது வெற்றியை சுவைத்தது. இதேபோல் ஜார்ஜியா அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் அஜர்பைஜானை தோற்கடித்து 8-வது வெற்றியை பதிவு செய்தது.

11-வது சுற்று முடிவில் பெண்கள் பிரிவில் உக்ரைன் (7 வெற்றி, 4 டிரா), ஜார்ஜியா (8 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி) தலா 18 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன. இருப்பினும் டைபிரேக்கர் புள்ளி அடிப்படையில் முன்னிலை கண்ட உக்ரைன் அணி தங்கப்பதக்கத்தை தனக்குரியதாக்கியது. ஜார்ஜியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்தியா 1-வது, அமெரிக்கா, கஜகஸ்தான் ஆகிய அணிகள் தலா 17 புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும் டைபிரேக்கர் புள்ளி அடிப்படையில் உயர்ந்த நிலையில் இருந்த இந்தியா 1-வது அணி 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தியது.

அடுத்த போட்டி...

சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக முடிந்த நிலையில், அடுத்த (45-வது) செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் 2024-ம் ஆண்டு நடக்கிறது. இதைத் தொடர்ந்து 46-வது செஸ் ஒலிம்பியாட்டை 2026-ம் ஆண்டில் நடத்தும் வாய்ப்பை உஸ்பெகிஸ்தான் பெற்றிருக்கிறது.

மேலும் செய்திகள்