கேன்டிடேட் செஸ்: முதல் சுற்றில் பிரக்ஞானந்தா, குகேஷ் ஆட்டம் 'டிரா'
|கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரோன்டோ நகரில் கடந்த புதன்கிழமை தொடங்கியது.
டொரோன்டோ,
உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரோன்டோ நகரில் கடந்த புதன்கிழமை தொடங்கியது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கு தனித்தனியாக நடைபெறும் இந்த போட்டியில் இரு பிரிவிலும் தகுதி பெற்ற 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொரு வீரரும், மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். மொத்தம் 14 சுற்றுகள் நடைபெறும். இதன் முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் நடப்பு சாம்பியனுடன் மோதுவார்கள்.
இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் பிரிவு தொடக்க சுற்றில் 4 ஆட்டமும் டிராவில் முடிந்தன. பிரக்ஞானந்தா (இந்தியா)-பிரோவ்ஜா அலிரெஜா (பிரான்ஸ்) இடையிலான ஆட்டம் 39-வது நகர்த்தலிலும், இந்தியாவின் டி.குகேஷ்-விதித் குஜராத்தி மோதிய ஆட்டம் 21-வது நகர்த்தலிலும், அமெரிக்காவின் பேபியானோ காருனா-ஹிகரு நகமுரா ஆட்டம் 41-வது நகர்த்தலிலும், நிஜாத் அபாசவ் (அஜர்பைஜான்) - இயான் நெபோம்நியாச்சி (ரஷியா) மோதிய ஆட்டம் 34-வது நகர்த்தலிலும் சமனில் முடித்து கொள்ளப்பட்டது.
பெண்கள் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சீன வீராங்கனை ஜோங்யி டான் 52-வது காய் நகர்த்தலில் சக நாட்டு வீராங்கனையான டிங்ஜி லீயை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கினார். இந்திய வீராங்கனைகள் வைஷாலி-கோனெரு ஹம்பி மோதிய ஆட்டம் 41-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இதேபோல் அன்னா முசிசக் (உக்ரைன்)-நுர்க்யுல் சலிமோவா (பல்கேரியா), ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோரியாச்கினா-கேத்ரினா லாக்னோ இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தன.