கேன்டிடேட் செஸ் போட்டி: குகேஷ் 2-வது இடத்துக்கு சரிவு
|இந்திய வீரர் குகேஷ் 11-வது சுற்றில் டிரா கண்டதால் 6½ புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
டொரோன்டோ,
கேன்டிடேட் செஸ் போட்டித் தொடர் கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் 8 வீரர் மற்றும் 8 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்கள்.
இந்த நிலையில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு நடந்த 11-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், அமெரிக்காவின் பேபியானோ காருனாவை சந்தித்தார். இதில் வெள்ளை நிற காய்களுடன் சவாலை தொடங்கிய குகேஷ், 40-வது நகர்த்தலில் டிரா செய்தார். மற்றொரு ஆட்டத்தில் வெள்ளைநிற காய்களுடன் களம் கண்ட சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 54-வது நகர்த்தலில் அமெரிக்காவின் ஹிகரு நகமுராவிடம் தோல்வியை ஒப்புக் கொண்டார். அவரது 2-வது தோல்வி இதுவாகும். இந்தியாவின் விதித் குஜராத்தி 67-வது நகர்த்தல் வரை போராடி ரஷிய வீரர் இயான் நெபோம்நியாச்சியிடம் (ரஷியா) பணிந்தார்.
இன்னும் 3 சுற்று மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் நெபோம்நியாச்சி 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதுடன், தொடர்ந்து 3-வது முறையாக கேன்டிடேட் செஸ் கோப்பையை நெருங்குகிறார். இதுவரை நெபோம்நியாச்சியுடன் முதலிடத்தை பகிர்ந்து வந்த இந்தியாவின் குகேஷ் 11-வது சுற்றில் டிரா கண்டதால் 6½ புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நகமுராவும் அவருடன் 2-வது இடத்தை இணைந்து பெற்றுள்ளார். பிரக்ஞானந்தா 5½ புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார்.
பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி, நுர்குல் சாலிமோவாவை (பல்கேரியா) எதிர்கொண்டார். இழுபறியாக 90-வது நகர்த்தலை கடந்த பிறகு ஹம்பியிடம் வெற்றி வசம் ஆனது. இதன் மூலம் தொடக்க லீக்கில் அவரிடம் அடைந்த தோல்விக்கு ஹம்பி பழிதீர்த்துக் கொண்டார். இதே போல் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய தமிழகத்தின் ஆ.வைஷாலி 70-வது நகர்த்தலில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோரியாச்கினாவை மடக்கினார்.
சீனாவின் டான் ஜோங்யி தன்னை எதிர்த்த கேத்ரினா லாக்னோவை (ரஷியா) சாய்த்தார். பெண்கள் பிரிவில் ஜோங்யி 7½ புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். மற்றொரு சீன வீராங்கனை டிங்ஜி லீ 7 புள்ளியுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.