கேன்டிடேட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: இன்று தொடக்கம்
|கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.
டொரோன்டோ,
உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங் கனையை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் இன்று தொடங்குகிறது. கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவின் டொரோன்டோ நகரில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 8 முன்னணி வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். கேன்டிடேட் செஸ்சில் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி ஒரே நேரத்தில் நடத்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
ஆண்கள் பிரிவில் 5 முறை சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் இந்த போட்டிக்கு தகுதி பெற்று இருந்த போதிலும் விலகி விட்டார். மற்றபடி இந்தியாவின் பிரக்ஞானந்தா, டி.குகேஷ், விதித் குஜராத்தி மற்றும் பேபியானோ காருனா, ஹிகரு நகமுரா (அமெரிக்கா), நிஜாத் அபாசவ் (அஜர்பைஜான்), அலிரெஜா பிரோவ்ஜா (பிரான்ஸ்), இயான் நெபோம்நியாச்சி (ரஷியா) ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். மொத்தம் 14 சுற்று நடைபெறும். இதன் முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர் ரூ.43 லட்சம் பரிசுத்தொகை, சாம்பியன் கோப்பையுடன், 2024-ம் ஆண்டுக்கான 'பிடே' உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரெனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்.
அதே போல் பெண்கள் பிரிவில் இந்தியாவின் வைஷாலி மற்றும் கோனெரு ஹம்பி, லெ டிங்ஜி, டான் ஜோங்யி (இருவரும் சீனா), கேத்ரினா லாக்னோ, அலெக்சாண்ட்ரா கோரியாச்கினா (இருவரும் ரஷியா), நுர்க்யுல் சலிமோவா (பல்கேரியா), அன்னா முசிசக் (உக்ரைன்) ஆகியோர் விளையாட உள்ளனர்.
இந்த போட்டியில் கோப்பையை வெல்லும் வீராங்கனை ரூ.21½ லட்சம் பரிசு பெறுவதுடன், நடப்பு உலக சாம்பியன் ஜூ வென்ஜனுடன் (சீனா) அடுத்த ஆண்டுக்கான பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் மோதுவார் என்பது குறிப்பிடத்தக்கது.