உலக பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் லக்ஷயா சென் 8-வது இடத்துக்கு முன்னேற்றம்
|உலக பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் லக்ஷயா சென் 8-வது இடத்துக்கு முன்னேற்றினார்.
புதுடெல்லி,
பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் ஒரு இடம் உயர்ந்து 8-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவருடைய சிறந்த தரநிலையாகும். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி இணை 8-வது இடத்தில் தொடருகிறது.
இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா ஜோடி 2 இடம் அதிகரித்து 21-வது இடத்துக்கு வந்துள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சி 'நம்பர் ஒன்' வீராங்கனையாக வலம் வருகிறார். ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 6-வது இடத்தில் மாற்றமின்றி தொடருகிறார்.