உலக பேட்மிண்டன் தரவரிசை: அஸ்வினி - தனிஷா ஜோடி முன்னேற்றம்
|பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 12-வது இடத்தில் தொடருகிறார்.
புதுடெல்லி,
உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி 4 இடங்கள் ஏற்றம் கண்டு 28-வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் நடந்த சையத் மோடி சர்வதேச போட்டியில் 2-வது இடம் பெற்றதன் மூலம் அவர்கள் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 8-வது இடத்தில் நீடிக்கிறார். லக்ஷயா சென் 17-வது இடத்திலும், கிடாம்பி ஸ்ரீகாந்த் 24-வது இடத்திலும் உள்ளனர். கடந்த வாரம் நடந்த சையத் மோடி சர்வதேச போட்டியில் அரைஇறுதி வரை முன்னேறிய இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத் ஒரு இடம் உயர்ந்து 30-வது இடம் பிடித்துள்ளார்.
பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 12-வது இடத்தில் தொடருகிறார். பெண்கள் இரட்டையர் பிரிவில் திரிஷா ஜாலி-காயத்ரி ஜோடி 19-வது இடத்தில் இருக்கின்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி 2-வது இடம் வகிக்கின்றனர்.