உலக பேட்மிண்டன் போட்டி: அரைஇறுதிக்குள் நுழைந்தார் எச்.எஸ்.பிரனாய் - பதக்கத்தை உறுதி செய்தார்
|28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது.
ஹோபன்ஹேகன்,
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், 'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு ஒலிம்பிக், உலக சாம்பியனுமான விக்டர் ஆக்சல்சென்னை (டென்மார்க்) எதிர்கொண்டார்.
இதில் முதல் செட்டை இழந்த பிரனாய், அதன் பிறகு சரிவில் இருந்து சூப்பராக மீண்டெழுந்து அடுத்த இரு செட்டுகளை தனதாக்கி உள்ளூர் நாயகனுக்கு அதிர்ச்சி அளித்தார். 68 நிமிடங்கள் நீடித்த திரில்லிங்கான இந்த மோதலில் பிரனாய் 13-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் ஆக்சல்சென்னை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்து பிரமாதப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் பிரனாய்க்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் உறுதியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த 31 வயதான பிரனாய் உலக பேட்மிண்டனில் ருசிக்கும் முதல் பதக்கம் இதுவாகும். ஒட்டுமொத்த உலக பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா பெறப்போகும் 14-வது பதக்கமாகும்.
முன்னதாக இரட்டையர் பிரிவில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி கால்இறுதியில் டென்மார்க்கின் கிம் ஆஸ்ட்ரப்- ஆன்டர்ஸ் ஸ்காரப் ரஸ்முசென் இணையை சந்தித்தது. இதில் டென்மார்க் ஜோடியின் சவாலை சமாளிக்க முடியாமல் சாத்விக்- சிராக் கூட்டணி 18-21, 19-21 என்ற நேர் செட்டில் தோல்வி கண்டு வெளியேறியது.