பிளிட்ஸ் செஸ் போட்டி: பிரக்ஞானந்தாவுக்கு 3-வது இடம்
|பிளிட்ஸ் செஸ் போட்டி கடந்த 2 நாட்கள் கொல்கத்தாவில் நடந்தது.
கொல்கத்தா,
டாட்டா ஸ்டீல் சர்வதேச ரேபிட் செஸ் போட்டியை தொடர்ந்து பிளிட்ஸ் செஸ் போட்டி கடந்த 2 நாட்கள் கொல்கத்தாவில் நடந்தது. முதல் நாளில் நடந்த 9 சுற்றுகள் முடிவில் 6½ புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா நேற்று நடந்த 9 சுற்றுகளில் அலெக்சாண்டர் கிரிசுக் (ரஷியா), நோடிர்பிக் அப்டுசாட்டோரோவ் (உஸ்பெகிஸ்தான்), விதித் குஜராத்தி (இந்தியா) ஆகியோருக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தார்.
மேலும் 3 ஆட்டங்களில் வெற்றியும், 3 ஆட்டங்களில் டிராவும் கண்டார். 18 சுற்றுகள் முடிவில் 11 புள்ளிகள் பெற்ற பிரக்ஞானந்தா 3-வது இடம் பெற்றார். ரஷிய வீரர் அலெக்சாண்டர் கிரிசுக் 12 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். நோடிர்பிக் அப்டுசாட்டோரோவ் (11 புள்ளி) 2-வது இடம் பிடித்தார். இந்தியாவின் 'நம்பர் ஒன்' வீரரான டி.குகேஷ் (7½ புள்ளி) 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.