பராக் சர்வதேச செஸ்: 3 இந்திய வீரர்கள் ஆட்டமும் 'டிரா'
|பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்து வருகிறது.
பராக்,
பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 வீரர்கள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுகிறார்கள். இதன் 4-வது சுற்று ஆட்டங்கள் அனைத்தும் டிராவில் முடிந்தன. இதன் ஒரு ஆட்டத்தில் இந்திய இளம் கிராண்ட்மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா, செக்குடியரசு வீரர் நுயேன் தாய் டாய் வானை சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த மோதல் 40-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இதேபோல் இந்திய வீரர் டி.குகேஷ்-நோடிர்பெக் அப்துசத்தரோவ் (உஸ்பெகிஸ்தான்) இடையிலான ஆட்டம் 39-வது நகர்த்தலில் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி-மாடிஸ் பார்டெல் (போலந்து) இடையிலான ஆட்டம் 41-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது.
4-வது சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசத்தரோவ், ஈரான் வீரர் பர்ஹாம் மாக்சோட்லூ தலா 3 புள்ளியுடன் முதடலித்தில் உள்ளனர். டி.குகேஷ் (இந்தியா), ரிச்சர்ட் ராப்போர்ட் (ருமேனியா) ஆகியோர் தலா 2½ புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கின்றனர்.