பேட்மிண்டன் தரவரிசை: முதலிடத்தை இழந்த சாத்விக் - சிராக் ஜோடி
|உலக பேட்மிண்டன் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
புதுடெல்லி,
உலக பேட்மிண்டன் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை முதலிடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு சறுக்கியது.
நடப்பு சாம்பியனாக இருந்த இவர்கள் இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் கலந்து கொள்ளாமல் விலகியதன் விளைவு தரவரிசையிலும் எதிரொலித்துள்ளது. சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடி முதலிடத்துக்கு முன்னேறியது.
ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீ காந்த் 4 இடங்கள் சரிந்து 32-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்ற இந்தியர்களான எச்.எஸ். பிரனாய் 10-வது இடமும், லக்ஷயா சென் 14-வது இடமும் வகிக்கிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 10-வது இடத்தில் நீடிக்கிறார். பெண்கள் இரட்டையர் பிரிவில் தனிஷா கிரஸ்டோ- அஸ்வினி பொன்னப்பா, திரிஷா ஜாலி- காயத்ரி ஜோடி தலா ஒரு இடம் உயர்ந்து முறையே 19-வது இடத்திலும், 24-வது இடத்திலும் உள்ளனர்.