உலக செஸ் சாம்பியன்ஷிப்பை இந்தியாவில் நடத்த முயற்சி - இந்திய செஸ் சம்மேளனம் தகவல்
|உலக செஸ் சாம்பியன்ஷிப்பை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக இந்திய செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
உலக சாம்பியனுடன் மோதும் வீரரை முடிவு செய்வதற்காக கனடாவின் டொரோன்டோ நகரில் நடத்தப்பட்ட கேன்டிடேட் செஸ் போட்டியில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த குகேஷ் மகத்தான வெற்றி பெற்றார். இதில் பங்கேற்ற 8 வீரர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோதினர். இதன் முடிவில் குகேஷ் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, கேன்டிடேட் செஸ் போட்டியில் இளம் வயதில் மகுடம் சூடிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். குகேஷ், ஆண்டின் கடைசியில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரனுடன் விளையாட உள்ளார்.
இந்நிலையில் இந்திய இளம் புயல் குகேஷ், சீனாவின் டிங் லிரன் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை இந்த ஆண்டின் கடைசியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிக்கான இடம், தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளர் தேவ் பட்டேல் நேற்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'உலக செஸ் சாம்பியன்ஷிப்பை இந்தியாவில் நடத்துவதற்கு உரிமை கோருவது தொடர்பாக சர்வதேச செஸ் சம்மேளனத்திடம் நாளை (இன்று) பேச இருக்கிறோம். இந்த போட்டி இந்தியாவில் நடந்தால் நிச்சயம் மிகச்சிறப்பானதாக அமையும். இந்தியாவில், குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒன்றில் போட்டி நடைபெற வாய்ப்புள்ளது' என்றார். இந்தியாவில் கடைசியாக சென்னையில், 2013-ம் ஆண்டில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.