ஆசிய விளையாட்டு போட்டி: பேட்மிண்டனில் சிந்து, பிரனாய் வெற்றி
|ஆசிய விளையாட்டு போட்டியின் பேட்மிண்டனில் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனாய், வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஹாங்சோவ்,
ஸ்குவாஷ் போட்டியில் அசத்தல்
ஆசிய விளையாட்டு பேட்மிண்டனில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-10, 21-15 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் வென் சி ஹூவை தோற்கடித்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் எச்.எஸ்.பிரனாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.
ஸ்குவாஷ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 11-5, 12-10, 11-3 என்ற நேர்செட்டில் ஜப்பானின் ருனோசுக் சுகேவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார். இதன் கலப்பு இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் தீபிகா பலிக்கல்-ஹரிந்தர் பால் சிங் இணை 7-11, 11-5, 11-4 என்ற செட் கணக்கில் பிலிப்பைன்சின் ஜெமிகா அரிபாடோ-ஆன்ட்ரூ கார்சியா ஜோடியை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. இதேபோல் இந்தியாவின் அனாஹத் சிங்-அபய்சிங் கூட்டணி 11-4, 8-11, 11-1 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் யாங் யோன்சோ-டோங்ஜூன் லீ இணையை சாய்த்து அரைஇறுதியை எட்டி பதக்கத்தை உறுதி செய்தது.
கபடியில் இந்திய அணிகள் வெற்றி
ஆக்கி போட்டியில் பெண்கள் பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கை துவம்சம் செய்தது. லீக் ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி 3 வெற்றி, ஒரு டிராவுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் அரைஇறுதியில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன.
கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 9 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 55-18 என்ற புள்ளி கணக்கில் வங்காளதேசத்தை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று தாய்லாந்தை எதிர்கொள்கிறது.
இதன் பெண்கள் பிரிவில் இந்திய அணி 56-23 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி முதல் வெற்றியை தனதாக்கியது. இந்தியா தனது முதலாவது ஆட்டத்தில் சீன தைபேயுடன் டிரா கண்டு இருந்தது. இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தாய்லாந்தை சந்திக்கிறது.
நீரஜ் சோப்ரா
தடகளத்தில் இன்று நடைபெறும் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் மற்றும் உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா களம் காணுகிறார்.
நீரஜ் சோப்ராவுக்கு சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் முழங்கால் காயம் காரணமாக போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் விலகி இருக்கிறார். இதனால் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை சிரமமின்றி தக்கவைப்பார் என்று தெரிகிறது.