< Back
பிற விளையாட்டு
ஆசிய விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி தேர்வில் பங்கேற்க போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கு வாய்ப்பு
பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி தேர்வில் பங்கேற்க போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
23 Jun 2023 6:02 AM IST

போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கு ஆசிய விளையாட்டு மற்றும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் செப்டம்பர் 16-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இரண்டு போட்டிகளுக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வுக்கான போட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால கமிட்டி நடத்துகிறது. ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணி வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு, இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுப்பி வைக்க ஜூலை 15-ந் தேதி கடைசி நாளாகும்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரித்து அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்து இருப்பதுடன் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியை தங்களுக்கு ஆகஸ்டு மாதத்தில் நடத்த வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்டு இருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, சத்யவார்த் காடியன், ஜிதேந்தர் கின்ஹா மற்றும் வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் ஆகியோருக்கு ஆசிய விளையாட்டு மற்றும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளித்துள்ளது. அவர்கள் தங்கள் எடைப்பிரிவில் முதலிடத்தை பிடிப்பவர்களுடன் ஆகஸ்டு 5 முதல் 15-ந் தேதிக்குள் நடைபெறும் தகுதி போட்டியில் ஒரு முறை மோதுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்