ஆசிய பேட்மிண்டன் போட்டி: திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
|40-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது.
துபாய்,
40-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-13, 21-8 என்ற நேர்செட்டில் அட்னன் இப்ராகிமை (பக்ரைன்) ஊதித்தள்ளி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 7-21, 21-23 என்ற நேர்செட்டில் முன்னாள் உலக சாம்பியன் லோக்கியான் யிவிடம் (சிங்கப்பூர்) வீழ்ந்து நடையை கட்டினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 22-20 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் வென்சி ஹூவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 46 நிமிடம் நடந்தது.
மற்ற இந்திய வீராங்கனைகள் மால்விகா பான்சோத் 23-25, 19-21 என்ற நேர்செட்டில் அகானே யமாகுச்சியிடமும் (ஜப்பான்), ஆகார்ஷி காஷ்யப் 6-21, 12-21 என்ற நேர்செட்டில் கோமங் அயுவிடமும் (இந்தோனேஷியா) தோல்வி அடைந்தனர்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி சரிவில் இருந்து மீண்டு வந்து 17-21, 21-17, 21-18 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் லானி டிரியா-ரிப்கோ சுகிர்டோ இணையை வீழ்த்தியது.