நீலகிரி
அரவேனு டிரீம் லெவன் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி
|கோத்தகிரியில் நடைபெற்று வரும் 20 ஓவர் கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணி அரவேனு டிரீம் லெவன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கோடநாடு கிரிக்கெட் கிளப் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் தாலுகா அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் கோத்தகிரி தாலுக்காவிற்கு உட்பட்ட 50 அணிகள் பங்கேற்று விளையாடின. நாக் அவுட் முறையில் நடைபெற்று வந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற டிரீம் லெவன், டாப் கைஸ், எம்.எஸ்.டி லெவன்ஸ், சிவகாமி எஸ்டேட் கிரிக்கெட் அணிகள் ஆகிய 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இதையடுத்து முதல் அரையிறுதி போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் தவிட்டுமேடு பகுதியை சேர்ந்த கோத்தகிரி டாப் கைஸ் மற்றும் அரவேனுவைச் சேர்ந்த டிரீம் லெவன் அணிகள் பங்கேற்று விளையாடின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டிரீம் லெவன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. இந்த அணியின் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பாண்டி 86 ரன்களும், மற்றொரு வீரர் கவுஷல் 31 ரன்களும் எடுத்தனர். டாப் கைஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் சசி மற்றும் அஜித் கோலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 120 பந்துகளில் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய டாப் கைஸ் கிரிக்கெட் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த அணியின் ஜெய்சங்கர் 52 ரன்களும், அஜித் கோலி 24 ரன்கள், ரதிஷ் தேவன் 22 ரன்கள் எடுத்தனர். டிரீர்ம் லெவன் அணியின் பந்து வீச்சாளர்கள் கவுஷல் மற்றும் ஆனந்த் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் டிரீம் லெவன் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரை இறுதி போட்டியில் எம்.எஸ்.டி லெவன்ஸ் மற்றும் சிவகாமி எஸ்டேட் கிரிக்கெட் அணிகள் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் டிரீம் லெவன் அணி இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.