கோயம்புத்தூர்
ஆனைமலை பள்ளி மாணவி தேர்வு
|தமிழக கபடி அணியில் விளையாட ஆனைமலை பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆனைமலையில் வி.ஆர்.டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கபடி விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டதன் காரணமாக மாவட்ட அளவில் சிறப்பாக விளையாடி தேர்ச்சி பெற்று, ஆண்டுதோறும் தமிழக அணிக்கு விளையாடி வருகின்றனர். முதல் கட்ட மண்டல தேர்வு போட்டிக்கு கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மிகவும் சிறப்பாக விளையாடும் மாணவிகளை கடந்த மாதம் திருப்பூரில் நடைபெற்ற தேர்வு போட்டியில் பல மாணவிகள் கலந்து கொண்டார்கள். அதில் சிறப்பாக விளையாடிய 7 மாணவிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, அடுத்து நடைபெற உள்ள மாநில அளவிலான தேர்வு போட்டிக்கு அனுப்பப்பட்டனர். அந்த 7 மாணவிகளில் எஸ். காவ்யா ஸ்ரீ (12-ம் வகுப்பு), எஸ். ஜென்யா ஸ்ரீ (10-ம் வகுப்பு) ஆகிய இருவரும் வி ஆர் டி பள்ளி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர். எஸ்.செந்தில் குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதா மற்றும் சக மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.