< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராக ஆதவ் அர்ஜூனா தேர்வு
|6 July 2023 8:33 AM IST
மேலும் 7 துணைத்தலைவர்களும், 5 இணை செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,
இந்திய கூடைப்பந்து சம்மேளன புதிய நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் கோவிந்தராஜை (கர்நாடகா) எதிர்த்து போட்டியிட்ட தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கூடைப்பந்து வீரர் ஆதவ் அர்ஜூனா மொத்தமுள்ள 39 வாக்குகளில் 38-ஐ பெற்று புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
புதிய தலைவரான 35 வயது ஆதவ் அர்ஜூனா தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். முன்னாள் வீரரும், மத்தியபிரதேச கூடைப்பந்து சங்க தலைவருமான குல்விந்தர் சிங் கில் பொதுச்செயலாளராகவும், ஆந்திரா கூடைப்பந்து சங்க பொருளாளர் செங்கல்ராய நாயுடு பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் 7 துணைத்தலைவர்களும், 5 இணை செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.