மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 7 பேர் கமிட்டி அமைப்பு
|இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 7 பேர் கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.
புதுடெல்லி,
'இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். லக்னோவில் நடக்கும் பயிற்சி முகாமில் சில பயிற்சியாளர்கள் இளம் வீராங்கனைகளிடம் அத்து மீறி நடக்கும் போக்கு சில ஆண்டுகளாக தொடருகிறது. எதிர்த்து கேட்டால் மிரட்டுகிறார்கள்' என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், தீபக் பூனியா, ரவி தஹியா உள்ளிட்ட இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் முகாமிட்டு கடந்த 3 நாட்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரிஜ் பூஷன் ஷரண் சிங் பதவி விலக வேண்டும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைத்து விட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும், பிரிஜ் பூஷனை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்று அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை. நேற்றும் போராட்டக்காரர்களிடம் அனுராக் தாக்குர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தீர்க்கமான நடவடிக்கை தேவை என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்.
இதற்கிடையே 66 வயதான பிரிஜ் பூஷன் ஷரண் சிங் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'எனக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மல்யுத்த வீரர்கள் காங்கிரஸ் மற்றும் தீபிந்தர் ஹூடாவின் (அரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.) கைப்பாவையாக இருக்கிறார்கள்.
30 ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் எனக்கு எதிராக இது போன்ற சதிவேலையில் ஈடுபட்டது. இப்போதும் மீண்டும் ஒரு முறை சதிதிட்டத்தை கையில் எடுத்திருக்கிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் தீபிந்தர் ஹூடாவின் அறிக்கையும், டுவிட்டர் பதிவுகளுமே இதை தெளிவுப்படுத்துகிறது. இந்த தாக்குதல் எனக்கு எதிரானது மட்டுமல்ல. என் மூலமாக பா.ஜ.க.வையும் குறி வைக்கிறார்கள்.' என்றார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அவசர கூட்டம் அயோத்தியில் நாளை நடக்கிறது. இதில் பிரிஜ் பூஷன் ராஜினாமா குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. இது ஒரு பக்கம் இருக்க, போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் ஆதரவுகரம் நீட்டி வருகிறார்கள். நேற்று காலை குத்துச்சண்டை வீரரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான விஜேந்தர்சிங் போராட்ட களத்திற்கு வருகை தந்து சிறிது நேரம் பேசினார். ஆனால் இந்த பிரச்சினையில் எந்த ஒரு அரசியல் சாயமும் பூச வேண்டாம் என்று கூறி அவரை உடனடியாக புறப்பட்டு போகச் செய்தனர்.
இதற்கு மத்தியில் மல்யுத்த வீரர்கள் தரப்பில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், 'பிரிஜ் பூஷனால் இளம் வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே இந்த விவகாரம் குறித்து கமிட்டி அமைத்து முழுமையாக விசாரிக்க வேண்டும்' என்று அதில் கேட்டுக் கொண்டனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்கம் 7 பேர் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளது. இந்த கமிட்டியில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், முன்னாள் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், வில்வித்தை வீராங்கனை டோலா பானர்ஜி, அலக்னந்தா அசோக், சதேவ் யாதவ் மற்றும் இரு வழக்கறிஞர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் விசாரித்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.