< Back
பிற விளையாட்டு
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய அணிகள் அறிவிப்பு
பிற விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய அணிகள் அறிவிப்பு

தினத்தந்தி
|
30 Jan 2022 4:35 AM IST

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பேட்மிண்டன் அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த இந்திய ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் லக்‌ஷயா சென் ஆண்கள் அணிக்கும், சையது மோடி சர்வதேச போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய வீராங்கனை மாள்விகா பான்சோத் பெண்கள் அணிக்கும் தலைமை தாங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு மற்றும் காயம் காரணமாக முன்னணி வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் இருந்து ஒதுங்கி இருப்பதால் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிகள் வருமாறு:-

ஆண்கள் அணி: லக்‌ஷயா சென், மிதுன் மஞ்சுநாத், கிரண் ஜார்ஜ், ரகு (ஒற்றையர் பிரிவு), ரவி கிருஷ்ணா, சங்கர் பிரசாத், ஹரிகரன், ரூபன் குமார், டிங்கு சிங் கோந்துஜாம், மன்ஜித் சிங் ஹவாய்ராக்பாம் (இரட்டையர் பிரிவு).

பெண்கள் அணி: மாள்விகா பான்சோத், அகார்ஷி காஷ்யப், அஷ்மிதா சாலிஹா, தரா ஷா (ஒற்றையர் பிரிவு), சிம்ரன் சிங், குஷி குப்தா, நிலா, அருபாலா, ஆர்த்தி சாரா சுனில், ரிஜா மக்ரீன் (இரட்டையர் பிரிவு).

அணி அறிவிப்பு குறித்து இந்திய பேட்மிண்டன் சங்க செயலாளர் அஜய் சிங்னியா கூறுகையில், ‘தற்போது நாங்கள் உள்நாட்டு போட்டிகளில் வீரர்கள் செயல்படுவதை அடிப்படையாக கொண்டு அணியை தேர்வு செய்து வருகிறோம். உலக தரவரிசையில் முதல் 25 இடங்களுக்குள் இருப்பவர்களை நேரடியாக தேர்வு செய்கிறோம்.

சீனியர் வீரர்கள் பலர் காயம் மற்றும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதால் எங்களது இளம் வீரர்களுக்கு இந்த போட்டி நல்லதொரு வாய்ப்பாகும். இதனை சரியாக பயன்படுத்தி இளம் வீரர்கள் முத்திரை பதிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
மேலும் செய்திகள்