< Back
பிற விளையாட்டு
14 அணிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து போட்டி; சென்னையில் நாளை மறுநாள் தொடக்கம்

கோப்புப்படம்

பிற விளையாட்டு

14 அணிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து போட்டி; சென்னையில் நாளை மறுநாள் தொடக்கம்

தினத்தந்தி
|
21 March 2024 3:53 AM IST

14 அணிகள் பங்கேற்கும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

சென்னை,

நெல்லை நண்பர்கள் கைப்பந்து கழகம் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் மற்றும் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (23-ந் தேதி) முதல் 28-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.

எஸ்.என்.ஜெ. குழுமம், 2 குரோ எச்.ஆர். நிறுவனம், ஜோன்ஸ் பவுண்டேசன் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் ஐ.ஓ.பி., இந்தியன் வங்கி, எஸ்.ஆர்.எம்., வருமான வரி, கலால் வரி, தமிழ்நாடு போலீஸ், டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, எஸ்.டி.ஏ.டி. ஆகிய 8 அணிகளும், பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., ஐ.சி.எப்., தெற்கு ரெயில்வே, தமிழ்நாடு போலீஸ், டாக்டர் சிவந்தி கிளப், எஸ்.டி.ஏ.டி. ஆகிய 6 அணிகளும் கலந்து கொள்கின்றன.

'லீக்' மற்றும் 'நாக்-அவுட்' முறையில் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.3 லட்சமாகும். ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு எஸ்.என்.ஜெ. கோப்பையுடன் ரூ.50 ஆயிரமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ஜோன்ஸ் பவுண்டேசன் கோப்பையுடன் ரூ.40 ஆயிரமும், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு 2 குரோ எச்.ஆர். கோப்பையுடன் ரூ.50 ஆயிரமும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரோமா குழும கோப்பையுடன் ரூ.40 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும். இது தவிர சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசு அளிக்கப்படும்.

23-ந் தேதி மாலை நடைபெறும் தொடக்க விழாவில் தமிழ்நாடு தடகள சங்க தலைவரும், போட்டி அமைப்பு குழு தலைவருமான டபிள்யூ. ஐ.தேவாரம் தலைமை தாங்குகிறார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை இயக்குனர் ஆபாஷ் குமார், எஸ்.என்.ஜெ.குழுமத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.என். ஜெயமுருகன், தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கின்றனர். இந்த தகவலை போட்டி அமைப்பு குழு செயலாளர் பி.ஜெகதீசன், ஒருங்கிணைப்பாளர் ஏ.தினகர், பொருளாளர் சி.ஸ்ரீகேசவன் ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்