உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் 13 வீரர்கள்
|உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் ஷிவ தபா, தீபக் உள்பட 13 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
புதுடெல்லி,
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் வருகிற 30-ந் தேதி முதல் மே 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 104 நாடுகளை சேர்ந்த 640 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1.63 கோடியும், வெள்ளிப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.81 லட்சமும், வெண்கலப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.41 லட்சமும் பரிசாக வழங்கப்படுகிறது.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 6 முறை பதக்கம் வென்றரும், உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான ஷிவ தபா, ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருக்கும் தீபக் போரியா உள்பட 13 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்திய குத்துச்சண்டை அணி வருமாறு:-
கோவிந்த் சஹானி (48 கிலோ உடல் எடைப்பிரிவு), தீபக் போரியா (51 கிலோ), சச்சின் சிவாச் (54 கிலோ), முகமது ஹூஸ்சாமுதீன் (57 கிலோ), வரிந்தர் சிங் (60 கிலோ), ஷிவ தபா (63.5 கிலோ), ஆகாஷ் சங்வான் (67 கிலோ), நிஷாந்த் தேவ் (71 கிலோ), சுமித் குண்டு (75 கிலோ), ஆஷிஷ் சவுத்ரி (80 கிலோ), ஹர்ஷ் சவுத்ரி (86 கிலோ), நவீன் குமார் (92 கிலோ), நரேந்தர் பெர்வால் (92 கிலோவுக்கு மேல்).