உலகக்கோப்பை ஆக்கி: 'டி' பிரிவு அணிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது- ஸ்ரீஜேஷ் கருத்து
|இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 'டி' பிரிவில் ஸ்பெயின்,வேல்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகளோடு இடம் பெற்றுள்ளது.
சென்னை,
ஆக்கி உலகக் கோப்பை தொடர் அடுத்த ஜனவரி 13 முதல் 29 வரையில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது.
2023 ஆம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ,பி,சி,டி பிரிவுகளில் இடம் பெற்றுள்ள அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்திய அணி 'டி' பிரிவில் ஸ்பெயின்,வேல்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகளோடு இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த உலக கோப்பை ஆக்கி தொடர் குறித்து இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் பேசியுள்ளார். இந்த அணி இடம் பெற்றுள்ள 'டி' பிரிவு குறித்து பேசிய அவர் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான போட்டிகள் சவாலாக இருக்கும் என தெரிவித்தார்.
இது குறித்து மேலும் பேசிய ஸ்ரீஜேஷ் கூறுகையில் "கண்டிப்பாக நீங்கள் 'டி' பிரிவில் உள்ள அணிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், காமன்வெல்த் போட்டியில் கூட அவர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்த மூன்று அணிகளும் நமக்கு நிச்சயம் சவால் அளிப்பார்கள். நாங்கள் காலிறுதி மற்றும் அரையிறுதிக்கு செல்ல மிகவும் சிறப்பாக விளையாட வேண்டும். இது எங்களுக்கு ஒரு அற்புதமான தொடராக இருக்கும்" என்றார்.