மகளிர் புரோ ஆக்கி லீக்; வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா
|இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருந்தது.
புவனேஸ்வர்,
மகளிருக்கான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரின் சில லீக் ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய முதல் 3 ஆட்டங்களிலும் சீனா, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை தழுவியிருந்தது.
இந்நிலையில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் நேற்று அமெரிக்காவுடன் விளையாடியது. இதில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி இந்த தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது.
இந்திய அணி தரப்பில் வந்தனா கட்டாரியா, தீபிகா மற்றும் சலீமா டேடே தலா ஒரு கோல் அடித்தனர். அமெரிக்கா தரப்பில் சன்னி கார்ல்ஸ் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் மீண்டும் சீனாவுடன் வரும் 12-ம் தேதி மோத உள்ளது.