< Back
ஹாக்கி
ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்று: இந்தியா அரைஇறுதிக்கு தகுதி
ஹாக்கி

ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்று: இந்தியா அரைஇறுதிக்கு தகுதி

தினத்தந்தி
|
17 Jan 2024 3:30 AM IST

இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை பந்தாடியது.

ராஞ்சி,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான பெண்கள் ஆக்கி தகுதி சுற்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். இந்த போட்டியில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.

இதில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள சவிதா தலைமையிலான இந்திய அணி நேற்று நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் இத்தாலியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை நேர்த்தியாக தொடுத்தது. இதன்பலனாக முதல் நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய வீராங்கனை உதிதா டுஹான் கோலாக்கினார். இந்திய அணியினர் தொடர்ந்து எதிரணிக்கு நெருக்கடி அளித்தனர். 41-வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவின் தீபிகா குமாரி கோலடித்தார். இதனையடுத்து இந்திய அணி தரப்பில் சலிமா டெடி 45-வது நிமிடத்திலும், நவ்னீத் கவுர் 53-வது நிமிடத்திலும், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி உதிதா 55-வது நிமிடத்திலும் கோலடித்தனர். 100-வது சர்வதேச போட்டியில் ஆடிய உதிதா 2 கோல் அடித்து முத்திரை பதித்தார்.

இதனால் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இத்தாலி வீராங்கனை கமிலா மாசின் பதில் கோல் திருப்பினார். முடிவில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை பந்தாடியது. முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோற்று இருந்த இந்திய அணி அதன் பிறகு தொடர்ந்து பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

'பி' பிரிவில் அமெரிக்கா (3 ஆட்டங்களிலும் வெற்றி) 9 புள்ளியுடன் முதலிடமும், இந்தியா (2 வெற்றி, ஒரு தோல்வி) 6 புள்ளியுடன் 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நியூசிலாந்து (ஒரு வெற்றி, 2 தோல்வி) 3 புள்ளியுடன் 3-வது இடமும், இத்தாலி (3 ஆட்டங்களிலும் தோல்வி) கடைசி இடமும் பெற்று அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்தன.

நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் இந்தியா-ஜெர்மனி, அமெரிக்கா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்