< Back
ஹாக்கி
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய வருண் குமார் புரோ ஆக்கி லீக் தொடரில் இருந்து விலகல்
ஹாக்கி

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய வருண் குமார் புரோ ஆக்கி லீக் தொடரில் இருந்து விலகல்

தினத்தந்தி
|
9 Feb 2024 8:58 AM IST

பெங்களூரு ஞானபாரதி போலீசார் ஆக்கி வீரர் வருண்குமார் மீது ‘போக்சோ’, கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரு,

இந்திய ஆக்கி அணியின் முன்னணி வீரரான வருண் குமார் மீது 22 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரு ஞானபாரதி போலீசில் கடந்த 5-ம் தேதி பாலியல் புகார் அளித்தார்.

முன்னாள் கைப்பந்து வீராங்கனையான அவர் தற்போது விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். அவர் அளித்துள்ள புகாரில், 'எனக்கும் ஆக்கி வீரர் வருண் குமாருக்கும் 2018-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது எனக்கு 17 வயது. நாங்கள் முதலில் நட்பாக பழக தொடங்கினோம். அவர் பெங்களூருவுக்கு பயிற்சிக்கு வந்தபோது நாங்கள் நேரில் சந்தித்த பிறகு காதலிக்க தொடங்கினோம்.

என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த அவர் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். திருமணம் செய்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்த வருண் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்து இருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஞானபாரதி போலீசார் ஆக்கி வீரர் வருண்குமார் மீது 'போக்சோ', கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் புவனேஷ்வரில் நாளை தொடங்க இருக்கும் புரோ ஆக்கி தொடரின் 2-வது கட்ட போட்டியில் இருந்து வருண்குமார் விலகி இருக்கிறார்.

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது. இந்த புகாரால் நான் உடலளவிலும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். மிரட்டி பணம் பறிக்கும் இந்த முயற்சிக்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய அவசர விடுப்பு தேவைப்படுவதாக ஆக்கி இந்தியாவிடம் கேட்டு பெற்று அவர் இந்த போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

மேலும் செய்திகள்