புரோ ஆக்கி லீக் தொடர் மிக முக்கியமானது - இந்திய அணியின் கேப்டன்
|புரோ ஆக்கி லீக் தொடர் மிக முக்கியமானது என்று ஹர்மன்பிரீத் சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
9 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதன் அடுத்த இரண்டு சுற்று ஆட்டங்கள் முறையே பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் வருகிற 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஜூன் 1-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையும் நடக்கிறது.
இதில் இந்திய ஆண்கள் அணி, அர்ஜென்டினா, பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துடன் தலா 2 முறை மோதுகிறது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் அர்ஜென்டினாவை வருகிற 22-ந் தேதி சந்திக்கிறது.
இந்த தொடரில் இந்திய அணி, இதுவரை விளையாடிய 8 போட்டியில், 5 வெற்றி, 3 தோல்வி என 15 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இதற்கான இந்திய அணியினர் கடந்த 14-ம் தேதி பெல்ஜியம் கிளம்பி சென்றனர்.
இந்நிலையில் இத்தொடர் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில், " ஆஸ்திரேலிய தொடருக்குப் பின் தற்போது, புரோ லீக் தொடரில் உலகின் முன்னணி அணிகளை சந்திக்க உள்ளோம். இத்தொடர் எங்களுக்கு மிக முக்கியமானது. ஏனெனில் ஒலிம்பிக் போட்டிக்கு முன் எங்களது திட்டங்களை இதில் செயல்படுத்தி சாதிக்க முயற்சிக்க உள்ளோம்.
அடுத்து, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக சிறந்த 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்வோம். இதற்கு புரோ ஆக்கி தொடர் பெரிதும் கைகொடுக்கும். கடந்த சில சீசன்களாக இத்தொடரில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்தது. இம்முறை முதலிடம் பெற்றால் நன்றாக இருக்கும்" என்று கூறினார்.