< Back
ஹாக்கி
புரோ ஆக்கி லீக் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
ஹாக்கி

புரோ ஆக்கி லீக் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

தினத்தந்தி
|
4 Jun 2023 2:07 AM IST

பெனால்டி ஷூட்-அவுட் முறையில் இந்தியா 4-2 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்தது.

லண்டன்,

9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது. இதில் லண்டனில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் வினாடியில் இருந்து கடைசி வரை பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 4-4 என்ற கோல் கணக்கில் 'டிரா ஆனது. இந்திய தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், மன்தீப்சிங், சுக்ஜீத் சிங், அபிஷேக் ஆகியோர் கோல் அடித்தனர். இங்கிலாந்து அணியில் 4 கோல்களையும் சாம் வார்டு அடித்தார். ஒரு கட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்ற நிலையில் இறுதிப்பகுதியில் இங்கிலாந்து சரிவில் இருந்து மீண்டு விட்டது.

இதைத் தொடர்ந்து வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 4-2 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்தது. இதன் மூலம் முந்தைய ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 2-4 என்ற கோல் கணக்கில் அடைந்த தோல்விக்கும் இந்தியா பழிதீர்த்துக் கொண்டது. இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்தியா 9 வெற்றி, 3 தோல்வி என்று 24 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் தொடருகிறது. இங்கிலாந்து 26 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அடுத்து நெதர்லாந்துக்கு பயணிக்கும் இந்திய அணி அங்கு அந்த நாட்டு அணியை 7-ந்தேதி எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்