புரோ ஆக்கி லீக்: இந்தியா-ஸ்பெயின் இன்று மோதல்
|வலுவான ஸ்பெயின் அணியும் வெற்றி கணக்கை தொடங்க வரிந்து கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
புவனேஷ்வர்,
9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 2-வது கட்ட போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் (இரவு 7.30 மணி) மோதுகிறது. முன்னதாக நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து-அயர்லாந்து அணிகள் (மாலை 5.30 மணி) சந்திக்கின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் போட்டியை வெற்றியுடன் தொடங்க தீவிரம் காட்டும். வலுவான ஸ்பெயின் அணியும் வெற்றி கணக்கை தொடங்க வரிந்து கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த வருண் குமார் பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் அளித்த பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இது குறித்து இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரேக் புல்டான் கருத்து தெரிவிக்கையில், 'வெளியில் இருந்து பார்த்தால் இது ஒரு சவாலான சூழ்நிலையாகும். அதே நேரத்தில் எங்களுக்கென்று ஒரு தொழில்முறை நிலை உள்ளது. எனவே இதுபோன்ற கவனச் சிதறலை தவிர்த்து எங்களது போட்டி திட்டத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துவோம்' என்றார்.