< Back
ஹாக்கி
ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்று; ஜெர்மனி அணி சாம்பியன்

image courtesy; twitter/@TheHockeyIndia

ஹாக்கி

ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்று; ஜெர்மனி அணி சாம்பியன்

தினத்தந்தி
|
21 Jan 2024 12:35 PM IST

ராஞ்சியில் நடைபெற்ற இந்த தகுதி சுற்றின் முடிவில் ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளன.

ராஞ்சி,

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இதில் பெண்கள் ஆக்கியில் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிக்கு பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, சீனா, அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 6 அணிகள் 2 தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படுகின்றன. தகுதி சுற்றில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும்.

இதன் ஒரு தகுதி சுற்று போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஜெர்மனி, ஜப்பான் (ஏ பிரிவு), அமெரிக்கா, இந்தியா (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

இதில் நடைபெற்ற அரையிறுதி சுற்றின் முடிவில் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றன. அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் 3-வது இடத்திற்கான போட்டியில் மோதின. இதில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றது.

இதனையடுத்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இதில் முதல் பாதியிலேயே ஜெர்மனி 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. அதன் பின்னர் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. முழுநேர ஆட்ட முடிவில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி இந்த தகுதி சுற்றில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஜெர்மனி தரப்பில் ஜிம்மர்மேன் சோன்ஜா மற்றும் ஜெட்டே ஆகியோர் தலா 1 கோல் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

ராஞ்சியில் நடைபெற்ற இந்த தகுதி சுற்றின் முடிவில் ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளன.


மேலும் செய்திகள்