ஆண்கள் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; 2-வது ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி
|இந்த தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மஸ்கட்,
முதலாவது ஐவர் ஆண்கள் ஆக்கி உலகக்கோப்பை போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் தொடங்கியது. இதில் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
இதில் இந்தியா 'பி'பிரிவில் எகிப்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஜமைக்கா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணி தொடக்க நாளான இன்று 2 லீக் ஆட்டங்களில் விளையாடியது. முதலாவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணிக்கெதிராக வெற்றி பெற்ற நிலையில், 2-வது ஆட்டத்தில் எகிப்து அணியுடன் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 6-8 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஜமைக்காவுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி எந்தவித சிக்கலுமின்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
முன்னதாக முடிவடைந்த முதலாவது பெண்கள் ஐவர் உலகக்கோப்பை ஆக்கியில் இந்திய அணி 2-வது இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.