நான்கு நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆக்கி தொடர்; இறுதி போட்டியில் இந்திய ஆண்கள் அணி தோல்வி
|இந்த தொடரின் இறுதி போட்டியில் இந்திய ஆண்கள் அணியை வீழ்த்தி ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பெர்லின்,
ஜெர்மனியில் 4 நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஆக்கி தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் தொடரை நடத்தும் அணியான ஜெர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்றன. இதில் நடந்த ஆண்கள் அணிகளுக்கான இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தொடரை நடத்தும் ஜெர்மனி ஆகிய அணிகள் மோதின.
இறுதி போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி அடுத்தடுத்து கோல்களை போட்டு இந்திய அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த போட்டியில் உள்ளூர் அம்சத்தை சாதகமாக பயன்படுத்தி விளையாடிய ஜெர்மனி 6-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் இந்திய அணி 2-வது இடமும், ஸ்பெயின் அணி 3-வது இடமும் பிடித்துள்ளன. முன்னதாக இதில் நடந்த லீக் போட்டியிலும் இந்திய அணி ஜெர்மனிக்கு எதிராக தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரின் மகளிருக்கான இறுதி போட்டியில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் இன்று விளையாட உள்ளன. இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 3-வது இடத்திற்கான போட்டியில் விளையாட உள்ளது.