நான்கு நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆக்கி தொடர்; ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி
|ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
பெர்லின்,
ஜெர்மனியில் 4 நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஆக்கி தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் தொடரை நடத்தும் அணியான ஜெர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் இந்திய ஆண்கள் அணி தனது முதல் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இருந்தது.
இந்திய அணி தனது 2-வது போட்டியில் தொடரை நடத்தும் ஜெர்மனி அணியுடன் மோதியது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஜெர்மனி 3 கோல்கள் அடித்து அசத்தியது. இரண்டாவது பாதியில் இந்திய அணி ஒரு கோல் மட்டுமே அடித்தது. இதன் மூலம் ஜெர்மனி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது.
இந்த தொடரில் நடைபெற்ற ஜூனியர் பெண்கள் போட்டியில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஜெர்மனி அணியுடன் விளையாடியது. இதில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.