'இது நான் வாழ்நாள் முழுவதும் போற்றும் ஒன்று'-இந்திய ஆக்கி கோல் கீப்பர் கிருஷன் பதக்
|ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் இந்த மாதம் தொடங்க உள்ளது.
பெங்களூரு,
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆக்கி விளையாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி அடுத்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி தனது முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியுடன் வரும் 24ஆம் தேதி விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வாகியிருக்கும் கோல் கீப்பர் கிருஷன் பதக் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் நிச்சயம் பெருமையான தருணம். எனது பயணத்தை திரும்பிப் பார்த்தால், இந்தியாவுக்காக 100க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 2-வது ஆசிய விளையாட்டுகளில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது நான் வாழ்நாள் முழுவதும் போற்றும் ஒன்று. நாங்கள் எந்த அணியையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். எந்த நேரத்திலும் நமது அணியின் தரத்தை குறைக்க முடியாது என்றார்.
மேலும், பயிற்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது . அனைத்து வீரர்களும் பெரிய போட்டிக்கு தயாராக கடுமையாக உழைத்து வருகின்றனர். பயிற்சி ஆடுகளத்தில், நாங்கள் ஒவ்வொரு நாளும் உழைக்கிறோம். அதைத் தவிர, நாங்கள் 4,5 கோல் கீப்பிங் பயிற்சிகளை நடத்தியுள்ளோம். முந்தைய ஆட்டங்களில் நாங்கள் செய்த தவறுகள் மற்றும் பிற விஷயங்களில் எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் கவனம் செலுத்தி, அதன்படி செயல்பட்டு வருகிறோம். ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம் என கூறியுள்ளார்.