" இது மறக்கமுடியாத தருணம்" - இந்திய ஆக்கி வீராங்கனை தீபிகா சோரெங்
|இந்திய ஆக்கி அணியின் 2023-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீராங்கனை விருது தீபிகா சோரெங்கிற்கு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி,
இந்திய ஆக்கி வீராங்கனையான தீபிகா சோரெங், 2023-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீராங்கனைக்கு வழங்கப்படும் அசுந்தா லக்ரா விருதை வென்றார்.
கடந்த ஆண்டு ஜீனியர் ஆக்கி அணியில் அறிமுகம் ஆன தீபிகா சிறப்பாக செயல்பட்டார். கடந்த வருடம் நடைபெற்ற மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார். அதில் 6 போட்டிகளில் விளையாடி 7 கோல்கள் அடித்த அவர், அந்த தொடரில் அதிக கோல்கள் அடித்த 2-வது வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். இதனால் அவர் இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், " இந்த பெருமையை எனக்கு அளித்த இந்திய ஆக்கி கூட்டமைப்புக்கு நன்றி. இது எனக்கு மறக்க முடியாத தருணம். இந்த பரிசுத்தொகை மற்றும் விருது எனக்கு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. மேலும் இது எனக்கு தொடர்ந்து சிறப்பாக செயல்படவும், நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் ஊக்கத்தை தருகிறது. இதற்கான பெருமைகள் அனைத்தும் அணியில் உள்ள பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள் மற்றும் சக வீராங்கனைகளையே சாரும். அவர்கள்தான் நான் சிறப்பாக செயல்பட தொடர்ந்து வழிகாட்டினார்கள்" என்று கூறினார்.