பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா
|7-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் இந்திய அணி தொடங்கி உள்ளது.
ராஞ்சி,
பெண்களுக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ஆக்கி போட்டிகள் வரும் நவம்பர் 5-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான இந்தியா மற்றும் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்நிலையில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இந்திய அணியின் சார்பில் சங்கீதா குமாரி 3 கோலும், மோனிகா, சலிமா டெடி, தீபிகா, லால்ரெம்சியாமி தலா ஒரு கோலும் அடித்தனர்.
முன்னதாக மாலை 4 மணிக்கு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஜப்பான் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும், மாலை 6.15 மணிக்கு நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான தென்கொரியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவையும் வீழ்த்தின.
இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜப்பான்-தென்கொரியா (மாலை 4 மணி), தாய்லாந்து-சீனா (மாலை 6.15 மணி), இந்தியா-மலேசியா (இரவு 8.30 மணி) அணிகள் மோத உள்ளன.