உலக தரவரிசை: இந்திய மகளிர் ஆக்கி அணி முன்னேற்றம்
|சமீபத்தில் இந்திய மகளிர் ஆக்கி அணியினர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜெய்ப்பூர்,
ஜார்கண்ட் மாநிலம் ஜெய்ப்பூரில் சமீபத்தில் நடந்து முடிந்த 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் தொடர்ந்து 6 போட்டிகளில் வென்று தோல்வி பக்கமே செல்லாமல் வீறுநடை போட்ட இந்திய அணி கோப்பையை 2-வது முறையாக வென்றது. ஏற்கனவே 2016-ம் ஆண்டில் வென்றிருந்தது. சாதனை படைத்த இந்திய வீராங்கனைகளை பாராட்டிய ஆக்கி இந்தியா அமைப்பு அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இவ்வாறு சமீபத்தில் நடைபெற்ற தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து உலக தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் ஆக்கி அணி முன்னேறியுள்ளது. இதில் உலகத் தரவரிசையில் இந்திய மகளிர் ஆக்கி அணி 6-ம் இடம் பிடித்துள்ளது. இந்திய அணி இப்போது 2368.83 தரவரிசைப்புள்ளிகளுடன், இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி ஆறாவது இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பு இந்திய மகளிர் அணி 8-வது இடத்தில் இருந்தது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பட்டம் வென்றது மட்டுமின்றி இறுதிவரை எந்த ஆட்டத்திலும் தோற்காமல் இருந்தது ஆகியவற்றின் மூலம் தரவரிசைப் பட்டியலில் முன்னேறியுள்ளது.
தரவரிசைப் பட்டியலில் நெதர்லாந்து அணி உலகின் சிறந்த மகளிர் ஆக்கி அணியாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும், அர்ஜெண்டினா அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து பெல்ஜியம் அணி நான்காம் இடத்திலும், ஜெர்மனி மகளிர் ஆக்கி அணி ஐந்தாம் இடத்திலும் உள்ளன.