உலக ஆக்கி தரவரிசையில் இந்திய அணி 4-வது இடத்துக்கு முன்னேற்றம்
|சர்வதேச ஆக்கி சம்மேளனம், அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
புதுடெல்லி,
சர்வதேச ஆக்கி சம்மேளனம், அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி, கடந்த ஜனவரி மாதம் ஒடிசாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் முதலிடத்தை பிடித்த ஜெர்மனி அணி, ரூர்கேலாவில் சமீபத்தில் நடந்த புரோ ஆக்கி லீக் போட்டியில் இந்தியாவிடம் அடுத்தடுத்து சந்தித்த 2 தோல்விகளால் 2 இடம் சறுக்கி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
உலகக் கோப்பை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற நெதர்லாந்து முதலிடத்துக்கும், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய பெல்ஜியம் 2-வது இடத்தையும் தனதாக்கி இருக்கின்றன. புரோ ஆக்கி லீக்கில் ஜெர்மனி மற்றும் வலுவான ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அசத்திய இந்தியா 6-வது இடத்தில் இருந்து 2 இடம் அதிகரித்து 4-வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி ஒரு இடம் பின்தங்கி 5-வது இடத்தை பெற்றுள்ளது.