பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: இந்திய அணி 'சாம்பியன்'
|இந்திய அணி இந்த கோப்பையை கையில் ஏந்துவது இது 2-வது முறையாகும்.
ராஞ்சி,
பெண்களுக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வந்தது.
இதில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பையை சொந்தமாக்கியது. அதில் சங்கீதா குமாரி 17-வது நிமிடத்திலும், நேகா 46-வது நிமிடத்திலும், லால்ரெம்சியாமி 57-வது நிமிடத்திலும், வந்தனா கட்டாரியா 60-நிமிடத்திலும் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.
தொடர்ந்து 6 போட்டிகள் வென்று தோல்வி பக்கமே செல்லாமல் வீறுநடை போட்ட இந்தியா இந்த கோப்பையை கையில் ஏந்துவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2016-ம் ஆண்டில் வென்றிருந்தது. சாதனை படைத்த இந்திய வீராங்கனைகளை பாராட்டிய ஆக்கி இந்தியா அமைப்பு அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதனிடையே 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சீனா 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது.