ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி 2023; ஏற்பாடுகள் தீவிரம்....!!!
|ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி 2023 சென்னையில் வரும் ஆகஸ்ட் மாதம் 3-தேதி தொடங்க இருக்கிறது.
சென்னை,
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை 2023-க்கு சரியாக ஒரு மாதம் உள்ள நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஆண்கள் ஆசியக் கோப்பையை நடத்திய பெருமை இந்த ஸ்டேடியத்திற்கு உண்டு.
கடந்த காலங்களில் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்திய மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் பல மேம்படுத்தப்பட்டுள்ளது. போட்டிகள் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதில் தமிழக அரசு பல முயற்சிகள் எடுத்து வருகின்றது.
வீரர்களின் உடை மாற்றும் அறைகள், செயல்படும் பகுதி, போட்டி அதிகாரிகளுக்கான அறைகள் மற்றும் மின்கம்பங்கள் ஆகியவை எப்ஐஎச் தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தரத்தை உயர்த்தி வருகின்றன.
சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஆக்கி சென்னைக்கு திரும்பியது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆக்கி இந்தியா தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் திலீப் டிர்கி, "ஆக்கி மீண்டும் சென்னைக்கு வருவதை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். மேலும் 2007 இல் ஆசியக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தினேன். அது எங்களுக்கு ஒரு மறக்கமுடியாத தொடராக இருந்தது என்றார்.
மேலும், இந்த மதிப்புமிக்க நிகழ்வை நடத்த தமிழக அரசு அளித்த உற்சாகத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தார். தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த போட்டிக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். ஆக்கி இந்தியாவும் உள்நாடு மற்றும் சர்வதேச நிகழ்வுகளை பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என கூறியுள்ளார்.
2007-ம் ஆண்டு நடந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை 7-2 என்ற கணக்கில் தோற்கடித்து கோப்பையை வென்ற தருணத்தை நினைவு கூர்ந்தார்.