ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்று அரையிறுதி: இந்திய அணி அதிர்ச்சி தோல்வி
|இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன்மூலம் ஜெர்மனி அணி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
ராஞ்சி,
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான பெண்கள் ஆக்கி தகுதி சுற்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஜெர்மனி, ஜப்பான் (ஏ பிரிவு), அமெரிக்கா, இந்தியா (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதி வாய்ப்பை இழந்த நியூசிலாந்து, செக்குடியரசு, சிலி, இத்தாலி அணிகள் 5 முதல் 8 இடத்தை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் விளையாடுகின்றன.
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 2-வது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி ஜெர்மனியுடன் பலப்பரீட்சை நடத்தியது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் இந்திய அணி வீராங்கனை தீபிகா ஒரு கோல் அடிக்க, அதற்கு பதிலடியாக ஜெர்மனி வீராங்கனை ஸ்டேபன்ஹார்ஸ்ட் சார்லோட் ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
தொடர்ந்து அதிரடியாக நடைபெற்ற ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் ஸ்டேபன்ஹார்ஸ்ட் சார்லோட் ஒரு கோல் அடித்து ஜெர்மனியை முன்னிலை பெறச் செய்தார். அதற்கு பதிலடியாக இந்திய அணியின் இஷிகா ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் கோல் அடிக்க போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலையில் இருந்தது.
இதனையடுத்து நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட்டில் இந்திய அணி 4 - 3 என்ற கோல்கணக்கில் ஜெர்மனியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதன்படி ஜெர்மனி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு வாய்ப்பாக நாளை நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பான் அணியை எதிர்கொள்ள உள்ளது.