உலகக் கோப்பை ஆக்கியில் இந்திய அணி வெளியேற்றம் - தொடரும் அரைநூற்றாண்டு கால சோகம்
|கடந்த 48 ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டியில் டாப்-4 இடத்திற்கு கூட வந்ததில்லை.
புவனேஸ்வர்,
16 அணிகள் இடையிலான 15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 'டி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த இந்திய அணி, 'சி' பிரிவில் 3-வது இடத்தை பெற்ற நியூசிலாந்துடன் நேற்றிரவு 2-வது சுற்றில் மல்லுக்கட்டியது.
உலகத் தரவரிசையில் 6-வதுஇடத்தில் உள்ள இந்தியா தங்களை விட 6 இடங்கள் பின்தங்கிய அணியுடன் மோதியதால் இந்தியாவின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கணிப்புக்கு மாறாக எல்லா வகையிலும் நியூசிலாந்து ஈடுகொடுத்து ஆடியதால் முதல் வினாடியில் இருந்தே களம் சூடுபிடித்தது.
இந்திய வீரர்கள் ஒரு கட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை கண்டனர். உபத்யாய் (17-வது நிமிடம்), சுக்ஜீத் சிங் (24-வது நிமிடம்), வருண்குமார் (40-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். ஆனால் முன்னிலையை இந்திய வீரர்களால் இறுதிவரை தக்க வைக்க முடியவில்லை.
43-வது நிமிடத்தில் நியூசிலாந்தின் மார்க் ரஸ்செலும், 49-வது நிமிடத்தில் சியான் பின்ட்லேவும் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக்கி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து கடைசி பகுதியில் அடுத்தடுத்து கிடைத்த இரு பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்தியா விரயமாக்கியது. இதன் பின்னர் கடைசி நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் சாம் லேன் அடித்த ஷாட்டை இந்திய கோல் கீப்பர் தடுத்து காப்பாற்றினார்.
வழக்கமான 60 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
பெனால்டி ஷூட்-அவுட்டிலும் சமநிலை (3-3) தொடர்ந்ததால், சடன்டெத் முறை கொண்டு வரப்பட்டது. சடன்டெத் முறைப்படி இரு அணிக்கும் தலா ஒன்று வீதம் வாய்ப்பு வழங்கப்படும். இதில் ஒரு அணி கோல் அடித்து மற்றொரு அணி கோல் அடிக்க தவறினால் அத்துடன் ஆட்டம் நிறுத்தப்படும்.
ஆனால் சடன்டெத்தும் ஒரே ஷாட்டுடன் முடிந்து விடவில்லை. இரு அணியினரும் மாறி மாறி கோல் அடிப்பதும் அல்லது நழுவ விடுவதுமாக இருந்ததால் டென்ஷன் மேலும் எகிறியது. இறுதியில் நியூசிலாந்து அணி 5-4 என்ற கணக்கில் இந்திய அணியை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த இந்திய அணி இனி 9 முதல் 12-வது இடத்துக்கான ஆட்டத்தில் விளையாடும்.
1975-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி அதன் பிறகு கடந்த 48 ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டியில் டாப்-4 இடத்திற்கு கூட வந்ததில்லை. அந்த அரைநூற்றாண்டு கால சோகம் இந்த முறையும் தொடருகிறது.