< Back
ஹாக்கி
கடந்த உலகக் கோப்பையைவிட சிறப்பாக ஆடுவோம்- இந்திய ஆக்கி வீரர் ஸ்ரீஜேஷ்
ஹாக்கி

கடந்த உலகக் கோப்பையைவிட சிறப்பாக ஆடுவோம்- இந்திய ஆக்கி வீரர் ஸ்ரீஜேஷ்

தினத்தந்தி
|
10 Jan 2023 11:00 PM GMT

கடந்த உலகக் கோப்பையைவிட சிறப்பாக ஆடுவோம் என்று இந்திய ஆக்கி வீரர் ஸ்ரீஜேஷ் கூறினார்.

15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'டி 'பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணியோடு, இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்பெயின் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி முதல் நாளில் ஸ்பெயினை சந்திக்கிறது.

உலகக் கோப்பை போட்டிக்கு முழுவீச்சில் தயாராகி வரும் இந்திய கோல் கீப்பர் 34 வயதான பி.ஆர்.ஸ்ரீஜேஷ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இது எனது 4-வது உலகக் கோப்பை போட்டியாகும். இதில் இன்னும் சிறப்பான நிகழ்வாக சொந்த மண்ணில் நான் விளையாடப்போகும் 3-வது உலகக் கோப்பை தொடர் இதுவாகும். வேறு எந்த வீரருக்கும் உள்நாட்டில் 3 உலகக் கோப்பையில் ஆடும் வாய்ப்பு கிடைத்திருக்காது என்று நினைக்கிறேன். அந்த வகையில் இது எனக்கு மிகப்பெரிய கவுரவமாகும். 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்தியா அரைஇறுதிக்கு கூட நுழையவில்லை. அந்த மோசமான சாதனையை மாற்றுவதற்கு எங்களுக்கு இது இன்னொரு வாய்ப்பாகும். முந்தைய உலகக் கோப்பையை விட இந்த முறை முன்னேற்றம் கண்டு, பதக்கமேடையில் ஏறுவோம் என்று நம்புகிறேன். எத்தனை உலகக் கோப்பை போட்டிகளில் ஆடுகிறோம் என்பது முக்கியமல்ல. அதில் வெற்றி கிடைத்ததா இல்லையா என்பதுதான் முக்கியம். இந்த உலகக் கோப்பை போட்டியில் எனது 100 சதவீத முழு திறமையை வெளிப்படுத்தி சிறந்த முடிவை பெற ஆர்வமுடன் உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

1975-ம் ஆண்டு உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்த இந்திய அணி அதன் பிறகு டாப்-3 இடத்திற்குள் கூட வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்