உலகக் கோப்பை ஆக்கி: அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-ஜெர்மனி இன்று மோதல்
|உலகக் கோப்பை ஆக்கி போட்டி அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-ஜெர்மனி இன்று மோதுகிறது.
புவனேஸ்வர்,
15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர், ரூர்கேலா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.இன்று (வெள்ளிக்கிழமை) புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இரண்டு அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. முதலாவது அரைஇறுதியில் உலக தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, 4-வது இடத்தில் உள்ள ஜெர்மனியை (மாலை 4.30 மணி) எதிர்கொள்கிறது.
3 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமலும், கால்இறுதியில் ஒரு கோல் வித்தியாசத்தில் ஸ்பெயினை வென்று அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. 2 முறை சாம்பியனான ஜெர்மனி அணி லீக் சுற்றில் தனது பிரிவில் 2-வது இடம் பெற்றதால் 2-வது சுற்றில் ஆடி கால்இறுதிக்குள் நுழைந்ததுடன், கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் இங்கிலாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
இவ்விரு அணிகளும் இதுவரை 45 முறை சர்வதேச போட்டியில் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா 20 ஆட்டங்களிலும், ஜெர்மனி 21 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இரண்டாவது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியான பெல்ஜியம், 3-வது இடத்தில் உள்ள நெதர்லாந்தை சந்திக்கிறது. பெல்ஜியம் அணி லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் தனது பிரிவில் முதலிடம் பிடித்ததுடன் கால்இறுதியில் நியூசிலாந்தை விரட்டியடித்து அரைஇறுதிக்குள் வந்தது.
3 முறை சாம்பியனான நெதர்லாந்து அணி 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடத்தை தனதாக்கியதுடன் கால்இறுதியில் தென் கொரியாவை எளிதில் துவம்சம் செய்து அரைஇறுதியை எட்டியது. இளம் வீரர்களை அதிகம் கொண்ட நெதர்லாந்து அணி இந்த போட்டி தொடரில் இதுவரை 27 கோல்கள் அடித்து வலுவான நிலையில் உள்ளது. அந்த அணி தொடர்ந்து 3 முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற வரிந்து கட்டும்.
அதேநேரத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்களை அதிகம் கொண்ட பெல்ஜியம் அணி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேற எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை மோதியுள்ளன. இதில் நெதர்லாந்து 20 ஆட்டங்களிலும், பெல்ஜியம் 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இதற்கிடையே ரூர்கேலாவில் நேற்று இரவு நடந்த 9 முதல் 16-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 8-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை பந்தாடியது. நாளை நடைபெறும் 9 முதல் 12-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.